கரூரில் செயல்படாத நல வாரியத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா காலத்தில் உயிர் அச்சமின்றி செய்தி களத்தில் முன் நின்று செய்திகளை பொது மக்களுக்கும் அரசுக்கும் அளித்த செய்தியாளர்களை முன் களபணியாளர்கள் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் பிறகு தமிழகத்தில் உள்ள ஏகோபித்த செய்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பத்திரிக்கையாளர் நல வாரியத்தை தமிழக அரசு துவக்கியது.
பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக இணைந்தனர்.
அவ்வாறு இணைந்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அதேசமயம் பத்திரிக்கையாளர்களுக்கு என அறிவிக்கப்பட்ட சலுகை திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று நான்கு வருடங்களாகியும் முன்கள பணியாளர்கள் என அறிவிப்பு செய்த பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் எதையும் வழங்கவில்லை.
மேலும் நல வாரியத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களே இந்த நல வாரியத்தில் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால், பத்திரிக்கையாளர்களுக்கு என அமைக்கப்பட்ட இந்த வாரியத்தில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
பத்திரிக்கையின் நல வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளுக்கு நிர்வாகத்தில் இடம் அளிக்கவில்லை.
இதன் காரணமாக பத்திரிக்கையாளர் நல வாரியம் செயல்படாத வாரியமாக மாறியது
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த ஆலோசனை வழங்கியதின் அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்கள், செயல்படாத நல வாரியத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், தவறினால் நலவாரியத்தை இழுத்து மூட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.