
கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், அட்லஸ் கலையரங்கத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழறிஞர்கள்,எழுத்தாளர்களை சிறப்பிக்கும் இலக்கிய கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது,
செம்மொழியான தமிழ் மொழி உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்று. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் மொழி பேசப்படுகிறது.
இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளது.இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும், பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னரும், உலகப் பொது மறையான திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுகளில் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 அதிகமானவை தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன என வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழிலும், மற்ற மொழிகள் அனைத்தும் 5 விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.
இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும்.
இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். மேலும், பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், சிலப்பதிகாரம் ஆகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை வளர்த்தெடுத்த தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கரூர் மாவட்டத்தில் உள்ள மறைந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் வா.செ. குழந்தைசாமி, நன்னியூர் நாவரசன், சி. இறையரசன், மீ. சு. இளமுருகு பொற்செல்வி ஆகியோருக்கு இலக்கியக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கில் வா.செ. குழந்தைசாமி என்னும் தலைப்பில் வ.சரவணன், நன்னியூர் நாவரசன் என்னும் தலைப்பில் மேலை பழநியப்பன், சி. இறையரசன் என்னும் தலைப்பில் பாவலர் ப. எழில்வாணன் , மீ. சு. இளமுருகு பொற்செல்வி என்னும் தலைப்பில் கடவூர் மணிமாறன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். மேலும் கரூர் மாவட்டத்தில் 85 தமிழறிஞர்கள் மற்றும் 15 எழுத்தாளர்கள் உள்ளனர்.
தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைப் பற்றியும், தமிழ்மொழியின் சிறப்புக்களைப் பற்றியும் இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/-மும், இரண்டாம் பரிகாக ரூ.3000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2000/- மும் பள்ளி அளவில் 3 மாணாக்கர்களுக்கும், கல்லூரி அளவில் 3 மாணாக்கர்களுக்கும் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் வே. ஜோதி, கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, தாளாளர் இல. சிவசாமி, கரூர் வி.க மன்றத் தலைவர் புலவர் அருணா பொன்னுசாமி, கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி. அழகர், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்