சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கேர்மாளம், திங்களூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் இணைய வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் கேர்மாளம் , திங்களூர் வனப்பகுதியில் கிராமத்தினர் குடும்ப அட்டை புதுப்பிக்கும் பணிக்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து வந்து இணையதள சேவை கிடைக்கும் இடத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி அப்பகுதி கிராமவாசிகள் கூறுகையில், அன்றாட தேவைகளில் ஒன்றான இணையதள சேவை இல்லாத காரணத்தினால் மருத்துவ அவசரங்களுக்கு கூட ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அன்றாட தேவைகளில் ஒன்றான இணையதள சேவை மற்றும் பேருந்து வசதிகளை எங்கள் பகுதியில் அமைத்து தர ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேர்மாளம், திங்களூர் பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.