திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கு பிறகு மண்டல பூஜை துவங்கியதை முன்னிட்டு கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கீழக்கரை சரக்கத்திற்குட்பட்ட ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் மூன்று போலீசார் வீதம் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கூட்ட நெரிசலை சமாளிக்கவும், முறைப்படி வரிசையின் மூலமாக தரிசனம் செய்ய நடைமேடை வசதி செய்யப்பட்டு வருகிறது. கண்காணிப்பில் கோயில் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மங்களநாதர் சுவாமி சன்னதி அருகே மண்டல பூஜை முன்னிட்டு கோயில் சிவாச்சாரியார்களால் புனித நீரால் பூஜிக்கப்பட்டு மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. தற்போது பள்ளி விடுமுறை துவங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், யாத்திரீகர்கள் இராமேஸ்வரம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, ஏர்வாடி தர்கா, வாலிநோக்கம், மூக்கையூர், மாரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *