பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திலுள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 16வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றதை கொண்டாடும் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவானது அந்தப் பள்ளியின் கல்வி தரத்தையும், ஆசிரியர் மற்றும் மாணவர் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து 16 ஆண்டுகள் முற்றிலும் தேர்ச்சி பெறும் சாதனையை எட்டியிருப்பது, அரசு பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான அடையாளமாகும்.
விழாவில் முக்கிய விருந்தினராக பி.பெ. செல்வகடுங்கோ படையாட்சி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார். மேலும் சோழன் க குமார் வாண்டையார், சோழன் சிங்கம் வினோத், கண்ணன், மணி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மாணவர்களின் பெற்றோரும் பெருமகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்றனர்.
இந்த சாதனையில் முக்கிய பங்காற்றியவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு, பணி ஈடுபாடு, மாணவர்களின் முயற்சி இவை அனைத்தும் ஒன்றிணைந்து இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளன.
இந்த வெற்றியை தொடர்ந்து ஊக்குவிக்கும் நோக்கில், மறைந்த தாயாரின் நினைவாக செயல்பட்டு வரும் சிவஞானம் அம்மாள் கல்வி அறக்கட்டளை, கடந்த 16 ஆண்டுகள் போலவே, இந்த ஆண்டும் மாணவர்களுக்கு பரிசுகள், ஊக்கத்தொகை உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அறக்கட்டளையின் “விதைத்துக் கொண்டேயிருப்போம்… விருட்சமாகும் வரை!” என்ற தொனிப்பொருள், கல்வியின் மூலம் சமூகத்தில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் பணி தொடரும் என்பதை உறுதிபடுத்துகிறது.