திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விரைவில் பிரேக் தரிசன’ வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கார்த்திகை, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு உள்பட முக்கிய விஷேசங்கள் வரும் 44 நாட்கள் செயல்படுத்தப்படமாட்டாது.
இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். பிரேக் தரிசன சேவையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த டப்பா, தேங்காய், பழம், விபூதி, மஞ்சள் பை அடங்கிய தொகுப்பு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த தரிசன வசதி குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக வருகிற 29ம் தேதிக்குள் பழனி தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.