ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில், பஸ் ஸ்டாண்டில் இருந்து பர்கூர் ரோடு, சீதாலட்சுமி தியேட்டர் வரையிலும், தவிட்டுப்பாளையம் யூனியன் அலுவலகம் வரையிலும், பவானி ரோட்டில் உள்ள அண்ணாமடுவுவரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர்.
இதன்படி, சாலையோரம் ஆக்கிரமித்திருந்த கடைகள், வீடுகளின் உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. முதல் கட்டமாக, கடந்த மாதம் 30ம் தேதி, அண்ணாமடுவில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் பர்கூர் ரோடு வழியாக இருந்த ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் அகற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா அருகில் இருந்து தவிட்டுப்பாளையம் யூனியன் அலுவலகம் வரை இரு புறங்களிலும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.