பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கலை உறுதிசெய்யும் நோக்கில் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கிய குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் திறந்து வைத்தார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரதராஜன்பேட்டை மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் பொதுமக்களின் நீர்வழங்கல் தேவைகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் கீழ் ரூ.69.35 இலட்சம் மதிப்பீட்டில் பிரதான குழாய்கள் அமைத்தல், ரூ.8.26 இலட்சம் மதிப்பீட்டில் பம்ப்செட் மற்றும் பேனல் போர்டு அமைத்தல், ரூ.6.14 இலட்சம் மதிப்பீட்டில் மின் அறைகள் அமைத்தல் மற்றும் ரூ.277.82 இலட்சம் மதிப்பீட்டில் இதர பணிகள் செய்யப்பட்டுள்ளன.
உடையார்பாளையம் பேரூராட்சியில் ரூ.11.84 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.51.54 இலட்சம் மதிப்பீட்டில் 1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ரூ.42.59 இலட்சம் மதிப்பீட்டில் 1.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ரூ.545.72 இலட்சம் மதிப்பீட்டில் பகிர்மான குழாய்கள் அமைத்தல், ரூ.42.38 இலட்சம் மதிப்பீட்டில் 2 வால்வுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் குறைந்து, பொதுமக்களுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கல் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொ.க. கண்ணன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (திருச்சி மண்டலம்) துவாரகநாத், வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்கரெட் அல்போன்ஸ், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித் குமார், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத், உதவி செயற்பொறியாளர் தமயந்தி, செயல் அலுவலர்கள் காவியா மற்றும் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.