திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள வர்த்தகர் சங்க அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பிரவின் தலைமை தாங்கினார்.
வர்த்தக சங்க தலைவர் கே. குணசேகரன், செயலாளர் ராயல் ஜி. திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ். புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட அலுவலர் பிரவின் பேசியதாவது:- கடைகளில் பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் போதைப் பொருட்கள் விற்றால் அபராதம் என்பது மிக மிக அதிக தொகையாக உள்ளது. ரூ.5, 10 லாபத்திற்காக ஆயிரக்கணக்கில் அபராத தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் ஓட்டல்கள், மருந்து கடைகளில் கட்டாயம் பாதுகாப்பு உரிமம் லைசென்ஸ் பெற வேண்டும் என்றார். கூட்டத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டத்தில் வர்த்தக சங்க துணைத்தலைவர் என். மாரிமுத்து, இணைச் செயலாளர்கள் எஸ். சிவசங்கர், ஒய். யாகூப் சலீம், நிர்வாக குழுவினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சதீஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.