கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழாவில் டாக்டர். தாமு பங்கேற்பு.
அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 20 வது ஆண்டு வரவேற்பு விழா புதன்கிழமை (02.07.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் திரு. சி. கூத்தரசன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தன்னுடைய தலைமை உரையில், கிராமப்புற ஏழை, எளிய மாணவ மாணவியர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் உயர்தர அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதனை மாணவ மாணவியர் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மேலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியின் விதிமுறைகளையும் மற்றும் சிறப்பு அம்சங்களையும் எடுத்துரைத்தார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் சீடர் மற்றும் திரைப்பட நடிகர் டாக்டர். தாமு அவர்கள் கலந்து கொண்டு எதிர்காலம்? என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவருடைய சிறப்புரையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் மேற்படிப்பிற்கான கல்வியின் அவசியத்தையும், மனதினை ஒருமுகப்படுத்தி பன்முக ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் அனைத்து மாணவ மாணவிகளும் அவரவர்களது பெற்றோர்களை மதித்து நடத்தல் வேண்டும்.
இந்திய தேசத்தின் வெற்றி மாணவ மாணவியர் கையில் உள்ளது. நாளைய தேசம் வகுப்பறையில் உள்ளது எனும் முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J அப்துல் கலாமின் பொன்மொழிகளை எடுத்துரைத்தார்.
மாணவ மாணவியர் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டும். பெற்றோர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் நன்றியுணர்வுடனும், உடல் நலம், மனநலம், குடும்பம், சமூகம் ஆகியவற்றின் பொறுப்புகளையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கல்வியில் நினைவாற்றல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்வில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடந்த கல்வியாண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் நூற்றுக்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கும்,நூறு விழுக்காடு தேர்ச்சி விகிதம் தந்த பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் இறுதியாக கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் இரா. சிவக்குமார் அவர்கள் நன்றியுரை கூறினார். இவ்விழா இனிதே நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.