திருவொற்றியூர் தாங்கல் பகுதி பீர் பயில்வான் தெருவில் வசிப்பவர் அல்தாப். இவரது மகன் நவ்பில் ( 17). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை இரவு தனிப்பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அதற்கு சற்று முன்புதான் பரவலாக கனமழை பெய்ததையடுத்து சாலையில் தண்ணீர் தேங்கியிருந்துள்ளது.
அதில் மின்கம்பி பழுதடைந்த நிலையில் தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் இதை உணராத நவ்பில் சாலையைக் கடக்க முயன்றபோது
மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டுள்ளார். உடனடியாக அருகிலிருந்தோர் நவ்பில்லை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நவ்பிலை பரிசோதித்தை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துபோய்விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் தனியார் மருத்துவமனைக்கு வந்து நவ்பிலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். வியாழக்கிழமை பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.