திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கடலங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமினை திருவாரூர் கால்நடைப் பெருக்கம் மற்றும் தீவன உற்பத்தி துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குநர் சிவகுமார் தொடங்கி வைத்து சிறந்த கிடேரி கன்று வளர்ப்போருக்கு பரிசு மற்றும் சிறந்த மேலாண்மைக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
கால்நடை மருத்துவர் சக்திவேல், சோனியா, அருணேஷ்குமார் உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் குழு, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் நோய் சிகிச்சை அளித்தனர். கால்நடை ஆய்வாளர் சசிகலா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கார்த்திக், வெங்கடேஷ், அனிதா ஆகியோர் சிகிச்சை அளிக்க உதவி புரிந்தனர்.
300 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் கவிப்பிரியா மற்றும் நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்தி 1962 திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நோய் தடுப்பு முறைகள் பற்றி விவரித்தனர். இறுதியாக கடலங்குடி ஊராட்சி செயலாளர் முகாமிற்கு நன்றி தெரிவித்தார்.