தாராபுரம் செய்தியாளர்
பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து பரபரப்பு: ₹3 கோடி இழப்பு – விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் பீதி
தாராபுரம், ஜூலை 9:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் உள்ள சீலநாயக்கன்பட்டி அருகே, செறியன் காடுதோட்டம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த காற்றாலை இயந்திரம் ஒன்று இன்று காலை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட விஜயா சிமெண்ட்ஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்தக் காற்றாலை, மாதாந்திர பராமரிப்பு பணிகளை ஏ.எம்.எஸ். எனும் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை அதிக வேகத்தில் வீசிய காற்றை தாங்க முடியாமல் காற்றாலை இயந்திரம் அடியோடு முறிந்து, ஆறு துண்டுகளாக சிதறி கீழே விழுந்தது.
இந்த சம்பவத்தில், காற்றாலை முழுமையாக சேதமடைந்த நிலையில், அதன் மதிப்பு சுமார் ₹3 கோடி ஆகும் என நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்றாலை விழுந்த வேகத்தில் அருகிலிருந்த மின் கம்பிகளும் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் விளைந்துள்ள பண்ணைகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்களும் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, காற்றாலை நிறுவனங்கள் தங்களுடைய உதிரி வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.