திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்
பிரபு செல்:9715328420
தாராபுரத்தில் 600 பேர் ஈடுபட்ட மாபெரும் மறியல் போராட்டம்: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய சங்கங்கள் – 370 பேர் கைது!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ஊழியர் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் இணைந்து இன்று (ஜூலை 9) மறியல் போராட்டத்தில் உறுதியாகக் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில், எல்.டி.எஃப், சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, ஜாக்டோ ஜியோ, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், எல்.ஐ.சி முகவர்கள் சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
20 அம்ச கோரிக்கைகளில் முக்கியமானவை:
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தல்
உணவு, மருந்து, வேளாண் உபகரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி நீக்கம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கான கலால் வரியை குறைத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தல்
தொழிலாளர்களுக்கான நல வாரியம் மூலம் ESI திட்டத்தை அமல்படுத்தல்
இந்தப் போராட்டம் அமராவதி ரவுண்டானா, எல்ஐசி அலுவலகம் முன்பு, தலைமை தபால் நிலையம், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம், அண்ணா சிலை அருகே உள்ளிட்ட ஐந்து முக்கிய இடங்களில் நடைபெற்றது.
போராட்டம் முற்றுப்பெற, தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டக்காரர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு அருகிலுள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது 370 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவகம், ஊராட்சி ஒன்றிய அலுவகம், அரசு மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், எல்ஐசி அலுவகம், போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட முக்கிய நிர்வாக மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறைவுபட்டதால், பொதுமக்களின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.