மு. முத்துக்குமார்
தேனி செய்தியாளர்
தமிழ்த் தேச மார்க்சியக் கழகம் மற்றும் தமிழ் மக்கள் உரிமை முன்னணி சார்பில் தேனியில், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்தவும், சாதி ஆணவக் குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச் சட்டம் இயற்றவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர், காவலர்களால் அடித்துச் சித்திரவதை செய்யப்படும் காணொளி, கடந்த ஜூலை 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வழக்கறிஞர் ஹென்றி திஃபேன் அவர்கள், ரமேஷை தனது அருகில் அழைத்து, காவல்துறையினர் ரமேஷை மிரட்டக் கூடாது என்றும், அப்படிக் காவலர்கள் மிரட்டினால் “என்னிடம் சொல்லுங்க ரமேஷ்..” என்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ரமேசுக்கு நம்பிக்கையும் தைரியமும் கொடுக்கும் வகையில் ஒலிபெருக்கியில் அறிவித்துப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் உரிமை முன்னணி அமைப்பாளர் மதியவன் இரும்பொறை தலைமை தாங்கினார். தமிழ்த் தேச மார்க்சியக் கழகம் தோழர்கள், இராவணன், வினோத் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை வலியுத்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மக்கள் தமிழகம் கட்சி தலைவர் தோழர் நிலவழகன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட அமைப்பாளர் தோழர் சுருளி, மக்கள் கண்காணிப்பகம் தலைமை இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திஃபேன், தமிழ்த் தேச மார்க்சியக் கழகம் சட்ட அறிவுரைஞர் வழக்கறிஞர் செல்வக்குமார், தமிழ்த் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் தெய்வம்மாள், தமிழ்த் தேச மார்க்சியக் கழகம் அமைப்பாளர் தோழர் உதயசங்கர், தோழர்கள் கதிர்க்கையன், சௌந்திரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். தோழர் இராபின் அவர்கள் நன்றியுரை கூறினார்…