சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்து இறங்கிய 319 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. லண்டனில் உள்ள சீகன்பால்கு தமிழில் அச்சிட பைபிளை தரங்கம்பாடிக்கு கொண்டு வரவும், சீகன்பால்குவுக்கு விரைந்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை:-

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன்பால்கு 222 நாட்கள் கப்பலில் பயணம் செய்து 1706-ம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வந்தடைந்தார். சீகன்பால்கு 1715-ல் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழில் பைபிளை, காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை,மை தயாரிக்கும் கூடத்தை அமைத்தார். தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார், தமிழ் நாள்காட்டியை (காலண்டர்) முதன்முதலில் வெளியிட்டார், இன்னும் பல்வேறு சாதனைகளை தமிழ்மொழிக்காக செய்தார்.
சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்து இறங்கிய 319 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

சீகன்பால்கு வந்து இறங்கிய கடற்கரை இடத்தில் இருந்து பேராயர் கிரிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் பள்ளி மாணவர்கள், டிஇஎல்சி நிர்வாகத்தினர் சீகன்பால்க் திருவுருவச் சிலை அமைந்துள்ள இடத்திற்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேராயர் கிரிஸ்டியன் சாம்ராஜ் கூறியதாவது; இந்தியாவில் முதல் அச்சுக் கூடத்தை நிறுவிய சீகன்பால்குவிற்கு தரங்கம்பாடியில் மணிமண்டபம் கட்டவேண்டும்.

மேலும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு திருட்டு போன சீகன்பால்க் 1713 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து அச்சிட பைபிளை லண்டன் மியூசியத்தில் இருந்து மீட்டு தரங்கம்பாடி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *