சீர்காழி அருகே பழையார் கிராமத்தில் அதிவேக விசைப்படகு பயன்பாடு காரணமாக விசைப்படகு மீனவர்களுக்கு உரிய மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றம். சிறிய வகை மீன்கள் முதல் மீன் குஞ்சுகள் வரை பிடிக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்பட்டதாக கூறி படகுகளை நிறுத்திய விசை படகு மீனவர்கள் ரூபாய் 26 கோடி மதிப்பிலான துறைமுக விரிவாக்க பணி தரமில்லை என புகார் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீனவ கிராமத்தில் இருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் கேரளா,ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.= இந்நிலையில் கடந்த சில நாட்களாக உரிய மீன்கள் கிடைக்காமல் விசைப்படகு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் 60 நாட்கள் அமலில் இருந்த நிலையில் தடைக்காலம் முடிவடைந்து தற்போது வரை 10 நாட்கள் கூட முழுமையாக மீன்பிடிக்கச் செல்லவில்லை என்று விசைப்படகு மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தடைக்காலத்தின் போது சிறு தொழில் மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குறிப்பிட்ட எல்லை மீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாலும், தற்போது வரை அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக விசைப்படகு மற்றும் வலைகள் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் நடைபெற்று வருவதாலும் முற்றிலுமாக மீன்வளம் குறைந்து விசைப்படகு மீனவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஒரு முறை கடலுக்குச் சென்று வருவதற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படும் நிலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு கூட மீன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக எஞ்சின்கள் பொருத்தப்பட்ட படகுகள் மூலம் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சிறிய வகை மீன்கள் மற்றும் மீன் குஞ்சுகள் வரை பிடிக்கப்படுவதால் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பழையார் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மீன்பிடிக்க சென்று நஷ்டத்துடன் கரை திரும்புவதற்கு பதில் மீன்பிடிக்க செல்லாமலே இருந்து விடலாம் என்கிற நிலையில் பழையார் துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 230 விசைப்படகுகள் இருந்த நிலையில் தற்போது 166 விசைப்படகுகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் மீன்வளம் குறைய தொடங்கினால் இன்னும் படகுகள் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்படும் எனவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கும் மீனவர்கள் ரூபாய் 26 கோடி மதிப்பீட்டில் அடையாறு துறைமுகம் விரிவாக்க பணி தரம் இல்லாமல் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக துறைமுகம் அமைந்துள்ள கடுவையாற்றை முழுமையாக தூர்வாரப்படவில்லை எனவும், மின்விளக்கு, வாகனம் நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் துறைமுகம் விரிவாக்க பணி முடிவடையும் தருவாயில் உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், பழையார் துறைமுக பகுதியில் பயன்பாட்டில் உள்ள அதிவேக விசைப்படகுகள் மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்தும் ஃபைபர் படகுகளையும் ஆய்வு செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழையார் விசைப்படகு மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *