திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் புதிய கற்கால கருவிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது..திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார்.
எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி ,சிவசுப்பிரமணியன், சங்கரராமன், குகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.புதிய கற்கால கருவிகள் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,புதிய கற்காலம் என்பது ஆங்கிலத்தில் நியோ லித்திக் என்று அழைக்கப்படுகிறது.
இது கிரேக்கச் சொல்லாகும் , neo நியோ என்றால் புதிய என்றும் , lithic லித்திக் என்றால் கல் என்றும் பொருள்படும். புதிய கற்காலத்தில் மனிதன் வழுவழுப்பான மற்றும் கூர்மையான கற்களை உடைத்து மெருகூட்டப்பட்ட கோடாரி சிறிய உளி உள்ளிட்ட கற்கருவிகளை பயன்படுத்தினான்.
புதிய கற்காலம் புரட்சி காலமாகும் , ஏனென்றால் இந்த காலகட்டத்தில் தான் விவசாயம் என்ற ஒரு முறையை மனிதன் முதன் முதலில் கையாண்டான். மிருகங்களை பழக்க படுத்தி விவசாயத்தில் ஈடுபடுத்தினர்.
கற்காலத்தில் தமிழர்கள் கற்களை கருவிகளாக பயன்படுத்தி கைகோடாரிகள், இதய வடிவிலான கைகோடாரிகள், முக்கோண வடிவ கை கோடாரிகள், வெட்டுக்கத்திகள், சுரண்டிகள், சிறிய வெட்டு கருவிகள், கூர்முனை கருவிகள், வட்டுகள் என இயற்கையாக கிடைத்த கரடு முரடான கற்களை கொண்டு கருவிகளை செய்து நிலத்தை தோண்டுவதற்கும், மரத்தை வெட்டுவதற்கும், நிலம் மரம் ஆகியவற்றைத் துளைக்கவும், விலங்குகளின் இறைச்சியை கிழிக்கவும், தோல் உரிக்கவும், மரப்பட்டை சீவவும், ஈட்டியை போன்று வீசி எறிந்து விலங்குகளை கொள்ளவும் பயன்படுத்தினர் என்றார்.