புதுச்சேரி காரைக்கால் சுமார் நாற்பது ஓட்டுநர்கள் மற்றும் பத்து உரிமையாளர்கள் உள்ளடங்கிய பெருந்தலைவர் காமராஜர் டாடா மேஜிக் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அன்னை ஆம்புலன்ஸ் உரிமையாளர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில தலைவர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார், கௌரவத் தலைவராக கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
செயல்தலைவர் திரு. சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார்.
பல்வேறு பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏழை, எளிய, சாமான்ய, அடித்தட்டு மற்றும் பாமர மக்களுக்கு மலிவான கட்டணத்தில் பொது போக்குவரத்து சேவை வழங்கி வரும் டாடா மேஜிக் டெம்போ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காகவும், அதே டெம்போக்களின் மூலம் பயனடையும் பயணிகளாகிய பொது மக்களின் நலனுக்காகவும், அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாகக் கொண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஐந்து வருடங்களில், சங்கத்தின் நேர்த்தியான நிர்வாகத்தினால் பல ஓட்டுநர்கள் உரிமையாளர்களாக மாறியுள்ளனர். சில உரிமையாளர்கள் கூடுதல் டெம்போக்களையும் வாங்கியுள்ளனர். எனவே, சங்கத்தின் பெயரை “பெருந்தலைவர் காமராஜர் டாடா மேஜிக் டெம்போ ஓட்டுநர்கள் நலச்சங்கம்” என இருந்து, “பெருந்தலைவர் காமராஜர் டாடா மேஜிக் டெம்போ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கம்” என்று மாற்றி, உரிமையாளர்களையும் உள்ளடக்கும் வகையில் நிர்வாகக் குழுவை விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டது.
மேலும், காரைக்காலில் இருந்து மண்டபத்தூர், விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் பாரதியார் சாலையில் டெம்போ வாகனங்களை இயக்க, உரிய உரிமம் கொண்ட ஓட்டுநர்களை, வேறு சில தனியார் பயணியர் வாகன ஓட்டுநர்கள், அந்த தடங்களில் தாங்கள் மட்டும் தான் ஓட்டி சம்பாதிக்க வேண்டும் என்ற தவறான சுயலாபத் தீய நோக்கத்துடன், சில அதிகாரிகளுடன் அந்தரங்க கூட்டணி ஏற்படுத்தி, சில அரசியல்வாதிகளின் பின்னணியில் மாஃபியா கும்பல் போல செயல்பட்டு வருகின்றனர். அவ்வழிகளில் செல்லும் டெம்போ ஓட்டுநர்களை பணி செய்ய விடாமல் மறித்து தடுக்கும், மிரட்டும், அவதூறாக பேசும் , கைகலப்பு போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது மிகப்பெரிய ஊழல் செயலாகும். இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்படும் சூழ்நிலையை அவர்கள் தாங்களே உருவாக்குகின்றனர். இதனால் பயணிகள், டெம்போ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், இவ்விதமான சட்டவிரோத, அநாகரிக மற்றும் ஊழல் குற்றச்சாட்டு மீது உடனடியாக அரசு கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
கடந்த ஐந்து வருடங்களாக வாகன தகுதிச்சான்றிதழ் பெறாமல், சட்டவிரோதமாக டெம்போ ஓட்டி, சங்கத்தையும் அதிகாரிகளையும் அரசையும், மக்களையும் ஏமாற்றி வந்த உரிமையாளர் ஒருவரும், பெண்ணிடம் மரியாதையோடு நடந்து கொள்ளாத ஓட்டுநர் ஒருவரும், சுய நல நோக்கத்துடன் இரண்டு டெம்போக்களுக்கு மட்டும் அபரிமித லாபம் பெறும் வகையிலும், மற்ற உரிமையாளர்களுக்கு ஒரவஞ்சனையாகவும், பாதகமாகவும் புதிய தடத்தை தாமாகவே பாரபட்சமாக பெற்றுக்கொள்ள, ஒரு சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவுடன் ஊழலில் ஈடுபட்ட உரிமையாளர் ஒருவரும், அந்த மூன்று நபர்களுடன் உடந்தையாக இருந்த மற்றொரு உரிமையாளரும் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
தேர்தல் வரவிருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கை நிருவாகம் முறையே நிலைநாட்ட வேண்டும். சுட்டிக்காட்டப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உடனடியாக உத்தரவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து, உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் என்று தீர்மானம் முடிவு செய்யப்பட்டது.
உரிமையாளர்கள் திரு. தினேஷ், திரு. அன்புரமேஷ், திரு. முகுந்தன், திரு. சங்கர் மற்றும் ஓட்டுநர்கள் திரு. பீர் முகம்மது, திரு.சபாபதி, திரு. ஜெகன், திரு. ரங்கராஜன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், சங்கத்தின் செயலாளர் திரு. செல்லத்துரை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.