டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை கடந்த மாதம் 12- ஆம் தேதி திறக்கப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 40 நாட்களை கடந்த நிலையில் ஆறுகளில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர் பாசன வாய்க்கால்களில் போதிய அளவு வருவதில்லை.
பாசனத்திற்கு தற்போது தண்ணீர் தேவை சற்று குறைவாக இருப்பினும் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடும் வகையிலும், நிரம்பாத நீர் நிலைகளை நிரப்பிடவும் தற்போது தண்ணீர் மிகவும் அவசியமாகிறது. சாகுபடி பணிகள் துவங்குவதற்கு முன்பாக சாகுபடி பணிகளுக்கு இடையூறு இன்றி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள குடமுருட்டி ஆறு பிரிவு சந்தன வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தலைப்பு வாய்க்கால் ஆன சந்தன வாய்க்கால் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி குடமுருட்டி பிரிவு சந்தன வாய்க்காலில் பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்து விட வளையமாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.