கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் பகுதியை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்..
கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி கரூர் மாநகராட்சி வார்டு எண்-11 மற்றும் 20 பகுதிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப.தலைமையில் 20 பயனாளிகளுக்கு ரூ. 15.48 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 15.07.2025 முதல் வரும் செப்டம்பர் மாதம் வரை நகர்ப்புற பகுதிகளில் 78 முகாம்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 101 முகாம்களும் என மொத்தம் 179 சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள கடைக்கோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையிலேயே சென்று வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.
கரூர் மாவட்டத்தில் 25.07.2025 வரை நடைபெற்ற இத்திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 13,894 கோரிக்கை மனுக்களும் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக 8,635 விண்ணப்பங்கள் என மொத்தம் 22,529 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக ..
கரூர் மாநகராட்சி வார்டு எண் 11 மற்றும் 20 உட்பட்ட பகுதிகளுக்கு கரூர் வாசவி மஹாலில் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கரூர் மாநகராட்சியின் சார்பாக 6 நபர்களுக்கு பிறப்புச் சான்று, இறப்புச் சான்று மற்றும் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 8 பயனாளிகளுக்கு வகுப்புச் சான்று, வருமானச் சான்று மற்றும் பிறப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களையும், எரிசக்தி துறையின் சார்பாக 1 நபருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும்,
கரூர் நகர கூட்டுறவு வங்கியின் சார்பாக ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவியும், ரூ. 50,000 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடனுதவியும் மற்றும் ரூ. 4.98 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டு அடமானக் கடனுதவியும், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்பு மற்றும் கறவை மாடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ. 50,000 மானியமாகவும் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ. 15.48 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி வழங்கினார்.
இம்முகாமில் மாநகராட்சி மேயர் வெ. கவிதா, மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, மண்டலக்குழு தலைவர் எஸ்.பி.கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்