எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியந்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை நேரடியாக அரசு பஸ் சேவை இல்லாததால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோதண்டபுரம் அல்லது புதுப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை இருந்து வந்தனர் .
இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த முதியவர்கள், மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து பன்னீர்செல்வம் எம்எல்ஏவிடம் பஸ் வசதி வேண்டி கிராம மக்கள் முறையீடு செய்தனர். இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் கொள்ளிடம், புளியந்துறை வழியாக புதுப்பட்டினத்திற்கு அரசு பஸ் இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துணை மேலாளர் +வணிகம்) சிதம்பர குமார் தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், திமுக சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி கிளை மேலாளர் செல்வகணபதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்து கொண்டு சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் புளியந்துறை வழியாக புதுப்பட்டினத்திற்கு செல்லும் அரசு பஸ்சை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், இந்த புதிய வழித்தடத்தின் மூலம் இயக்கப்படும் பஸ்ஸால் கொள்ளிடம் முதல் புதுப்பட்டினம் வரை உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதே போல் சீர்காழி பகுதியில் பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சித்திக், பொருளாளர் பாலாஜி, நிர்வாகிகள் ராஜசேகரன், மோகன், பாஸ்கரன், கொள்ளிடம் ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்