திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பெல்சியானா லூர்து மேரி, திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், பாரத சாரணர், சாரணியர் இயக்க மணப்பாறை உதவி ஆணையர் இளம் வழுதி உள்ளிட்டோர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், உலகப் பணத்தாள்கள் நாணயங்கள் பழங்கால பொருட்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் ராஜராஜ சோழ நாணயங்கள் குறித்து பேசுகையில், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம் பற்றிய ஆய்வில் நாணயங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ராஜராஜ சோழர் காலத்தில் தங்கம், வெள்ளி, ஈயம், செப்பு உலோகத்தில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.செப்பு நாணயங்களில் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார்.

அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் “ஸ்ரீராஜராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது என்றார் முன்னதாக தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா வரவேற்க, நிறைவாக சிவகாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *