திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பெல்சியானா லூர்து மேரி, திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தி விளக்கினர்.
பாரத சாரணர், சாரணியர் இயக்க மணப்பாறை உதவி ஆணையர் இளம் வழுதி தாய்லாந்து நாடு வெளியிட்ட 33வது உலக சாரணர் மாநாடு நூறு பாட் நினைவார்த்த நாணயம் குறித்து பேசுகையில், சாரணர் என்பது ஒரு உலகளாவிய இளைஞர் இயக்கம் ஆகும். இது இளைஞர்களுக்கு நட்பு, அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைக்கான திறன்களை கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களை சுறுசுறுப்பான குடிமக்களாக உருவாக்குகிறது. சாரணர் இயக்கம், 1907 ஆம் ஆண்டு ராபர்ட் பேடன் பவலால் தொடங்கப்பட்டது.
தாய்லாந்து நாடு 33வது உலக சாரணர் மாநாட்டை முன்னிட்டு 19-23 ஜூலை 1993 நூறு பாட் மதிப்பிலான நாணயத்தை செம்பு-நிக்கல் கலவை உலோகத்தில் 25 கிராம் எடையில் 38 மி.மீ. விட்டத்தில் வட்ட வடிவத்தில் வெளியிட்டது என்றார்.
முன்னதாக தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா வரவேற்க, நிறைவாக சிவகாமி நன்றி கூறினார்.