திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பள்ளி சமையலர்கள் தினமும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு சமைத்து வழங்குவது வழக்கம். நேற்று காலையும் வழக்கம் போல் காலை உணவு தயாரித்து மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
அதனை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர். இந்நிலையில் காலை 10 மணி அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் விஷ்வா, நான்காம் வகுப்பு மாணவர்கள் மித்ரன், ஈஸ்வரமூர்த்தி, மாணவிகள் பரணிகா, மதுஸ்கா, மூன்றாம் வகுப்பு மாணவிகள் கார்த்திகா, ரோகிணி, ஒன்றாம் வகுப்பு மாணவி மனிஸ்ஷா ஆகியோர் திடீரென வாந்தி எடுத்துள்ளனர். இதனனை கண்டு அதிர்ச்சி அடைந்த சகமாணவர்கள் இது குறித்து தலைமை ஆசிரியர் டேவிட் சகாயராஜிடம் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார் ஆகியோர் பள்ளிக்கு சென்று வாந்தி எடுத்த மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்றனர். பள்ளியில் தயாரிக்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்த தாகவும், அதை சாப்பிட்டதாலேயே மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்தாகவும் அவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அறிந்த வலங்கைமான் கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கேத்தணூர் யூ. இளவரசன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார்,
சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம் எல் ஏ அவர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே தொலைபேசி வழியாக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மாணவர்களின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார்.
அரசு பள்ளியில் பல்லி கிடந்த காலை உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.