EKYC ஆதார் எண் OTP மற்றும் FRS முறையை கைவிட கோரி-அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடையில் ஆர்ப்பாட்டம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு 21/08/2025 அன்று மாலை 4மணி அளவில் திருச்சி மாவட்ட”தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம்” சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களை தரவுகள் சேகரிப்பது என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கி வருகிறது.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்,6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு இணை உணவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ பதிவு செய்தால் மட்டுமே வழங்க வேண்டுமென்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு இந்த பணிகளை செய்வதற்கான அலைபேசி வழங்காத சூழலில் தரவுகளை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனவே அங்கன்வாடி மையப் பணிகளை செய்வதற்கு 5G செல்போன் வழங்க வேண்டும், அந்தந்த கிராமத்தின் நெட்வொர்க்கிற்கு ஏற்ப 5G சிம் கார்டு வழங்க வேண்டும்,
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் WIFI இணைப்பு வழங்க வேண்டும்,
பயனாளிகளுக்கு சத்து மாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ முறையை கைவிட வேண்டும்,EKYC ஆதார் எண் OTP மற்றும் FRS முறையை முற்றிலும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அலுவலகத்தில் இருந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதாவிடம் கேட்டதற்கு இந்த ஆர்ப்பாட்டத்தை பற்றி அங்கன்வாடி ஊழியர்களிடமே கேட்டு கொள்ளுங்கள் என்று மழுப்பலாக பதில் கூறினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்