புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2021-ஆனது கடந்த 30.6.2025 – அன்று முடிவடைந்ததன் காரணமாக 1.7.2025 முதல் 30.6.2026 முடிய ஓராண்டிற்கு மேற்கண்ட திட்டத்தை அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர் களுக்கு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்-2021-ல் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர் கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எவ்வித கருத்து கேட்பு நிலைப்பாட்டையும் மேற்கொள்ளாமல் பழைய அரசாணை யில் எவ்வித மாற்றமும் செய்யாமல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடம் மாதந்தோறும் ரூ300 பிடித்தம் செய்யப் படுகிறது. ஓய்வூதியர்களிடம் மாதம்தோறும் ரூ 495 பிடித்தம் செய்யப்படுகிறது. கண்புரை சிகிச்சைக்கு அதிக பட்சமாக ஒரு கண்ணிற்கு ரூ 30 ஆயிரம் வரையிலும், கர்ப்பப்பை நீக்கத்திற்கு அதிகபட்சமாக ரூ 50 ஆயிரம் வரையிலும் வழங்கப்படும் என அரசாணையில் தொகையானது தெளிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால், கண்புரை சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கம் ஆகிய இரண்டை தவிர்த்து புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வரையறுக்கப் பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான தொகையானது வெளிப்படையாக சிகிச்சை பெறும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

காரணம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள மருத்துவ மனைக்கும் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் சிகிச்சையின் கீழ் வரும் ஒவ்வொரு நோய்க்கும் எவ்வளவு என்பது தெரிந்த விஷயம். இந்த விபரம் வெளிப்படையாக அறியும் வகையில் அரசாணையில் இல்லாத காரணத்தால் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சிகிச்சைக்கான தொகையில் அதிகபட்சமாக 50%வரை பெறுவதே கடினமாக விஷய மாக உள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும் பயனாளிகள் கேட்டால் இந்த நோய்க்கான சிகிச்சைக்கு பேக்கேஜ் இவ்வளவு தான் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி யுள்ளது என ஒற்றை வரியில் பதில் சொல்லி முடிக்கின்றனர்.

தற்போது, அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர் கள் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறும்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் நோயாளிகளிடம் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100% கட்டணமில்லா சிகிச்சையை உரிய அரசாணையின்படி அமல்படுத்தாமல், விதிகளுக்கு புறம்பாக புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தொகையே அனுமதிக்கப்படும் என்பதை நான் அறிவேன் என்றும், எப்போதெல்லாம் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்காக முன்பணம் கேட்கிறதோ ? அப்போதெல்லாம் முன்பணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கி வருகின்றனர்.

இந்நிகழ்வானது (cashless treatment) கட்டணமில்லா சிகிச்சை என்ற அரசாணைக்கு முற்றிலும் புறமான விஷயமாகும். ஏற்கனவே, சிகிச்சை பெறும் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர் களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100% கட்டணமில்லா சிகிச்சை வழங்காமல் அதிகபட்சமாக 50%வரை மட்டுமே சிகிச்சைக்கான தொகையினை வழங்குவதே பெரிய விஷயமாக இருக்கும் போது, தற்போது மருத்துவ மனைகள் நோயாளி களிடம் மேற்கண்ட வாறு எழுத்துப் பூர்வமாக கடிதங்களை பெறுவது என்பது தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணையை கண் துடைப்பிற்காக செயல்படுத்து வதாகவே கருத வேண்டியதுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகளுக்கான பேக்கேஜ் நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்து சிகிச்சை பெறும் நோயாளி கள் மருத்துவ மனைகளில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டது

முதல் சிகிச்சை முடிந்து மருத்துவ மனையை விட்டு வெளியேறும் வரை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணையில் குறிப்பிட்டதற்கு இணங்க கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரும், நிதித் துறையும், கருவூலத் துறையும் உடனடியாக தலையிட்டு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிப் படுத்த வேண்டும்.

\மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் அரசாணைக்கு புறம்பாக செயல் படக்கூடிய மருத்துவமனை களின் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் பெ.சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *