கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திடக் கழிவு மேலாண்மை முறைகளை ஆய்வு செய்வதற்காக கோவை மாநகராட்சியின் பொதுச் சுகாதாரக் குழுத் தலைவர் பெ. மாரிசெல்வன் தலைமையிலான குழு காலை ஆய்வு மேற்கொண்டது.
மாநகராட்சி பகுதிகளில் எங்கும் குப்பைக் குவியல்கள் காணப்படுவதையும், இதனால் தூய்மைப் பணியாளர்கள் மீது அதிகாரிகள் கோபம் காட்டுவதையும் கண்டறிந்த அவர், இதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது, வீடுகளில் இருந்து குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள், மக்கும் குப்பைகள் மற்றும் ‘மக்கா குப்பைகள்’ பிரித்து சேகரிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது தெரியவந்தது.
இருப்பினும், பெரிய மால்கள், வணிக வளாகங்கள், மற்றும் உணவகங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் போன்ற வணிக நிறுவனங்கள் தங்களின் உணவுக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைக் கழிவுகளை இரவு நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைத் தொட்டிகளில் கொண்டு வந்து போட்டு விடுவதால், தூய்மைப் பணியாளர்களின் கழிவு பிரிப்புப் பணியில் குழப்பம் ஏற்படுவது கண்டறியப்பட்டது.
இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அதிகாலையில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் அதேபோல், குப்பைகளற்ற மாநகராட்சியை உருவாக்கும் நோக்கில், பொதுச் சுகாதாரக் குழுத் தலைவர் மாரிசெல்வன் இன்று காலை 6 மணியளவில் அதிகாரிகளுடன் கார்ப்பரேட் ஹோட்டல்களுக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனவா, மாநகராட்சியின் விதிமுறைகளை ஹோட்டல்கள் கடைப்பிடிக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
பல முறைகேடுகளும் அவரது கவனத்தை ஈர்த்தன.
ஆய்வின் போது, ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு ஏற்ப கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், பொது இடங்களில் குப்பை கொட்டக் கூடாது, பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
முறையாக குப்பைகள் தரம் பிரித்து கொடுக்க வேண்டும் செய்ய தவறினால், சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில்
மத்திய மண்டலம் சுகாதார அலுவலர் குணசேகரன் சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் 81வார்டு செயலாளர் பா.ஆனந்தன், மார்க்கெட் மூர்த்தி, மற்றும் அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.