கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக உருவாக்கிட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை அறிவித்து அதற்கு தேவையான நிதிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் 12.09.2025 வரை நடைபெறுகிறது.
இப்போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலர்களும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மொத்தம் ரூ.83.37 கோடி செலவில் நடைபெறுகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் மொத்தமாக 53 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் மாநில அளவில் தனி நபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1.00 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75,000, மூன்றாம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.25,000 பரிசாக வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3,000-ம், இரண்டாம் பரிசாக தலா ரூ.2,000-ம், மூன்றாம் பரிசாக தலா ரூ.1,000-ம் மற்றும் சான்றிதழ்களுடன் பதக்கம் வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பள்ளி பிரிவில் 7,763 மாணவ,மாணவியர்களும், கல்லூரி பிரிவில் 7,349 மாணவ,மாணவியர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 243, அரசு பணியாளர்கள் பிரிவில் 749 மற்றும் பொதுப் பிரிவில் 5945 ஆண்கள்,பெண்களும் என மொத்தம் 22,049 வீரர்/வீராங்கனைகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளார்கள்.
இப்போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரும் முழு விளையாட்டு திறனை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஸ்தங்கையா, மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், நிர்வாக இயக்குநர்,
V N C குழுமம் V N C பாஸ்கர், 48வது வார்டு கவுன்சிலர் இரா.வேலுசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோ.குணசேகரன், தடகளப் பயிற்றுநர் சு.சபரிநாதன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.