வலங்கைமான் அருகே கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி முதலியார் தெருவை சேர்ந்த ஜாபர் உசேன் மகன் நிசார் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த ரஞ்சிதா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் கும்பகோணம் வந்து கொண்டிருந்தனர்.
கார் வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் சாலபோகம் பைபாஸ் சாலையில் வந்த போது 5 பேர் காரின் மீது கருங்கற்களை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் பின்பகுதி கண்ணாடி உடைந்து காரில் இருந்த ரஞ்சிதாவின் தலையில் காயம் ஏற்பட்டது. ரத்தக் காயத்துடன் அவர் கும்பகோணம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நிசார் தொலைபேசி எண் 100 மூலமாக போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து கார் மீது கல் வீசிய 5 பேரையும் பிடித்து வலங்கைமான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வலங்கைமான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாலபோகம் தெற்கு தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் வசந்த குமார் (24), பாலமுருகன் மகன் ராமன் (18), மணக்குண்டு வெள்ளைச் சாமி மகன் விஜய் (19), செந்தில் மகன் எழிலரசன் (18) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.