ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் வரும் 8ம் தேதி மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான திட்டமிடல் ஆயத்தக் கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்டச்செயலாளர் சீனிவாசன் மற்றும் மாவட்டப் பொருளாளர் எமிமால் ஞானசெல்வி கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் செப்டம்பர் 8-ம் தேதி மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மாநிலத் தழுவிய மாவட்டத் தலைநகர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக்கல்வித் துறையில் மதுரை மாவட்டத்தில் பணி புரியும் 4,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சார்ந்த அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கப்பார்கள்.
1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண்:243ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
கல்லூரி பேராசிரியர் களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிடவும்,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டாதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு செய்ய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்.ஆர்.பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப் பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2002 முதல் 2005 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற ஆணையின்படி முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 8-ம் தேதி மாலை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள பெருந்துறை முறையீடு ஆர்ப்பாட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, மேலூர், தா.வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி, செல்லம்பட்டி ஆகிய ஒன்றியங்களிலி ருந்து தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச்செயலாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொருளாளர் எமிமால் ஞானசெல்வி ஆகியோர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்திற் கான திட்டமிடுதல் குறித்து கூட்டத்தில் அறிவித்தனர்..