ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட அனைத்து மருத்துவ பயனாளிகளுக்கும் உயரம், எடை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை, யூரியா, கிரியாட்டினின், கம்ப்ளீட் ஹீமோகிராம் போன்ற ரத்தப் பரிசோதனைகள் மற்றும் 982 பேருக்கு இ.சி.ஜி மேற்கொள்ளப்பட்டது.
இதில், 50 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 149 பேருக்கு எக்கோ பரிசோதனை, 105 மருத்துவ பயனாளிகளுக்கு எக்ஸ்ரே பரிசோதனை, 29 மருத்துவ பயனாளிகளுக்கு நுரையீரல் சளி பரிசோதனை, இதில் எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மேற்கொண்டதில் மூன்று பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், 317 பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில் 11 நபர்களுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இயன்முறை மருத்துவத்தில் 169 பயன்பாடுகளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது, 1000 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை, 800 மருத்துவ பயனாளிகளுக்கு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மற்றும் 1200 மருத்துவ பயனாளிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகளுக்கு கண்புரை பாதிப்பு கண்டறியப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோபி மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நரம்பியல் நிபுணர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சுமார் 60மாற்றுத் திறனாளிகளுக்கு திறனிழப்பு சான்றிதழ் (Disability Certificate) வழங்கப்பட்டது.
முகாமில் சுமார் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று, ஊட்டச்சத்து பெட்டிகள் வழங்கப்பட்டன. முகாமிற்கு வந்த சர்க்கரை நோயாளிகளுக்கு “பாதம் பாதுகாப்போம்” திட்டத்தின் கீழ் 384 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமிற்கு வந்த அனைவருக்கும் தெருக்கூத்து கலைஞர்களின் மூலம் சுகாதாரத் துறையில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்க உரை வழங்கப்பட்டது.
மொத்தம் 2428 மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட அலுவலர் அருணா, வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், அந்தியூர் அரசு மருத்துவமனை அலுவலர் பிரகாஷ், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி பலர் கலந்து கொண்டனர்.