ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஓணம் பண்டிகை’ கொண்டாட்டம் கோலாகலம்
கோயம்புத்தூர்
கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், “ஓணம் பண்டிகை” இன்று (02.09.2025) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர் திரு. மகேஷ்குமார், தலைமை நிர்வாக அலுவலர், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை, கோவை. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைக்க, ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைக்கட்டியது. மாணவ, மாணவிகள், கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர்.
அப்போது மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்திருந்த மாணவர் செண்டைமேளம் முழங்க அழைத்து வரப்பட்டார். மாணவிகள், பேராசிரியைகள் கல்லூரி வளாகத்தில் போட்டிருந்த அழகியப் பூக்கோலத்தைப் பார்த்து மகிழ்ந்ததுடன்,மாணவிகளின் திருவாதிரைக்களி நடனத்தைக் கண்டு ரசித்த நிகழ்வு, ஓணம் பண்டிகையின் புராண நிகழ்வை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்திருந்த மாணவருடன் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து அனைவருக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவைமிக்க பாயாசம் வழங்கி, ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகம் விழாக்கோலத்தில் காட்சியளித்தது.