திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சூரியகுமார் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,
அவருக்கு சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5- ந்தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரும், எழுத்தாளருமான ஆதலையூர் சூரியகுமார் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்தல், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தன்னுடைய பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பாட சராசரியை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் மாணவர்களிலேயே அறிவியல் சிந்தனையை வளர்த்தெடுப்பது,
கலாச்சாரம், தொன்மை பற்றி அறிய உதவுவது, தலைமை பண்பை வளர்ப்பது போன்றவற்றிக்காகவும் நிறைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் சூரியகுமாரை பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றி வேலன், ஆசிரியர்கள் ரேணுகா, விஜயகுமாரி, ராமமூர்த்தி, இளையராஜா, சுதா, இளநிலை உதவியாளர் சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டினர்.