ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில்
ஆவணி பொங்கல் திருவிழா நேற்று காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அம்மன் உருவம் பொறித்த கொடிபட்டத்தினை மேளதாளம், வான வேடிக்கையுடன் ஊர்வலமாக கிராம பொதுமக்கள் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் யாகசாலை பூஜையுடன் திருவிழா துவங்கியது. அதன் பின்பு கோவிலில் உள்ள கொடிமரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி பட்டம் ஏற்றப்பட்டது. அப்போது ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட்டனர்.
பின்னர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருநீறு, மஞ்சள் உட்பட பல்வேறு மூலிகைகள் ஊற்றி அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு நேர்த்திக்கடன் செய்யும் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர்.அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 15-ம் தேதி கோவில் முன்பு திருவிளக்கு பூஜையும்,16-ம் தேதி பொங்கல் விழாவும், 17-ம் தேதி அக்னிச்சட்டி, கரும்பாலை தொட்டில், வேல்குத்துதல், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன்கள்
ஏராளமான பக்தர்கள் செலுத்துவர். அன்று மாலை சாக்குவேடம் அணிதல் மற்றும் முளைப் பாரி ஊர்வலம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.