கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டாரம், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.

இத்திட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகால மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதய நலம், நரம்பியல், நுரையீரல், நீரழிவு நோய்,தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மன நல மருத்துவம், இயன்முறை, சித்த மருத்துவம், உணவியல் மருத்துவம், ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் அனைத்து சிகிச்சைகளும், பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 24 முகாம்களும், கரூர் மாநகராட்சியில் 3 முகாம்களும் என மொத்தம் 27 முகாம்கள் பிப்ரவரி 2026 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் 5 வது முகாம் தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இத்திட்ட முகாமில் பொதுமக்கள்பலர் கலந்து கொண்டுள்ளனர். பொதுமக்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டமானது மாவட்ட நிர்வாகமும், மருத்துவத் துறையும் இணைந்து பொதுமக்களின் நலனைக் காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப.தெரிவித்தார். முன்னதாக 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும்,காச நோயால் பாதிக்கப்பட்ட 3 நபர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி ஆகியோர் வழங்கினர். உடன் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. சுப்பிரமணியன், வெள்ளியணை ஹெல்த் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சுகாதார துறை தொடர்புடைய அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.