பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம்,
செந்துறை வட்டத்தில் உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தில் அரசு நிதியுதவியுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த பல மாதங்களாக பழுதடைந்து செயலிழந்த நிலையில் உள்ளது.
பெரியாக்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரில் சுண்ணாம்பு கல் அளவு அதிகமாக காணப்படுவதால், நேரடியாக கிணறு அல்லது பம்ப் மூலம் எடுக்கப்படும் நீரை குடிப்பதற்கு ஏற்றதாகாது. இதனால், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுத்திகரிப்பு நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
முதலில் சிறப்பாக இயங்கிய இந்த நிலையம், பல மாதங்களாக பராமரிப்பு குறைவால் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மீண்டும் சுண்ணாம்பு கலந்த நீரைத் தான் குடிக்க வேண்டிய அவலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சிறுவர்கள், முதியோர், பெண்கள் உள்ளிட்ட பலர் குடல்சம்பந்தமான நோய்கள், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் ஆபத்தில் உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுது பார்த்து மீண்டும் செயல்படச் செய்வதோடு, இதுபோன்ற சிக்கல் மீண்டும் ஏற்படாத வகையில் பராமரிப்பு பணி சீராக நடைபெற வேண்டும்” என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செந்துறை வட்ட நிர்வாகத்திடம் மக்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.