திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சிகளில் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 250 பயனாளிகள் வீடு கட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. அதில் முதற் கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்னதாக அறிவித்தார்.
அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமான வீடு இல்லாதவர்கள் என ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் ரூ. 3.50 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர், உதவிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு பயனாளர் தேர்வு குழு அமைக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனையடுத்து, பயனாளிகள் தேர்வு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் உறுதி செய்து, உதவிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை கொண்ட பயனாளர் தேர்வு குழு பயனாளிகளை உறுதி செய்தனர். அதையடுத்து வலங்கைமான் ஒன்றியத்தில் ஆதிச்சமங்கலம், மாணிக்க மங்கலம், அரித்துவாரமங்கலம், வீரமங்கலம், திருவோணமங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகளில் முதல் கட்டமாக 250 பயனாளிகளுக்கு தடையின்றி விரைவாக செய்திட ஏதுவாக கம்பி மற்றும் சிமெண்ட் ஆகியவை தமிழக அரசால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.தற்போது “கலைஞரின் கனவு இல்லம்”திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.