கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி கரூர் மாநகராட்சி வார்டு எண்.6 மற்றும் 10க்குட்பட்ட பகுதிகளுக்கு வெங்கமேடு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்”திட்டத்தின் மூலம் “மக்களைத் தேடி அரசு” என்ற நிலையை உருவாக்கி உள்ளார்கள்.
இம்முகாம்கள் மூலம் இதுவரை 79,897 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 28,569 மனுக்கள் கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களாக பொதுமக்கள் அளித்துள்ளனர்.
இம்முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க 45 நாட்களுக்குள் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டு தகுதியுடைய நபர்களின் கைகளில் நலத்திட்டங்களாக சென்று சேர்க்கப்படுமென கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இத்திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பாக 10 நபர்களுக்கு வருமானச் சான்று, பிறப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களையும், மாநகராட்சியின் சார்பாக 8 நபர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும் மற்றும் எரிசக்தி துறையின் சார்பாக 2 நபர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும் என மொத்தம் 20 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து புகளூர் வட்டம், மொஞ்சனூர் கிராமம், தொட்டம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நூலகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.