தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், செப்- 20. தஞ்சாவூர் பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும் அரிதான கண் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியதன் மூலம் பார்வைத்திறனை காப்பாற்றிய தமிழ்நாட்டில் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான மீனாட்சி மருத்துவமனை.
30 வயதான ஒரு விவசாயிக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சோதனையில் கண் குழிக்கு உள்ளே 3x2x3 அளவுள்ள ஒரு கட்டி மூளைக்குள் நீண்டிருப்பது கண்டறியப்பட்டது. கண் குழியின் உட்புற தசைப்பகுதிக்குள், கண் அசைவை கட்டுப்படுத்துகின்ற தசைகளால் சூழப்பட்ட ஒரு இடத்தில் அக்கட்டி அமைந்திருந்தது. இன்ட்ராகோனல் டெர்மாய்டு என அழைக்கப்படுகின்ற இப்பாதிப்பு மிகவும் அரிதானதாகும்; உலகளவில் இதுவரை சுமார் 40 நபர்களுக்கு மட்டுமே இப்பாதிப்பு இருந்ததாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இரண்டாவது நோயாளியான 40 வயதான ஒரு விவசாயிக்கு வலது கண்ணில் 11x7x6 செ.மீ. என்ற அளவுள்ள ஒரு பெரிய கட்டி இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. எக்ஸ்ட்ராகோனல் எபிடெர்மாய்டு என அழைக்கப்படும் இப்பாதிப்பு நிலையில் அக்கட்டி, மூளை மற்றும் மண்டையோட்டின் அடிப்பகுதி வரை நீண்டிருந்தது.
உலகளவில், இதுநாள் வரை இதே போன்ற 60 நேர்வுகள் மட்டுமே அறியப்பட்டிருக்கின்றன. இந்த இரு நோயாளிகளிடமிருந்து இரு கட்டிகளையும் வெற்றிகரமாக அகற்றியிருக்கிறது. ரூஃப் ஆர்ட்டிபிட்டோடோமி செயல்முறையில் கட்டியை அகற்ற அணுகுவதற்கு கண் குழியின் மேற்புற சுவரின் எலும்பு தற்காலிகமாக அகற்றப்பட்டது. லேட்ரல் ஆர்பிட்டோடோமி என்ற ஒரு தனிச்சிறப்பான செயல்முறையில், கண்ணின் தசைக்கூம்பிற்கு வெளியே அமைந்துள்ள கட்டியை அகற்ற அணுகுவதற்காக ஒரு நேரடியான மற்றும் பாதுகாப்பான அணுகல் உருவாக்கப்பட்டது. கண் குழியின் இயற்கையான தோற்றத்தை இந்நோயாளிகளுக்கு திரும்பவும் உருவாக்குவதற்காக அவற்றின் மறுசீரமைப்பு அறுவைசிகிச்சைகளும் இம்மருத்துவமனையில் செய்யப்பட்டன.
மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையின் முதுநிலை நிபுணரான மரு. N. அருண்குமார் தலைமையிலான அறுவைசிகிச்சைக் குழுவினர், இந்த இரு நுட்பமான மருத்துவ செயல்முறைகளையும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கின்றனர். பார்வைத்திறனையும், கண்ணின் இயக்கத்தையும் பாதுகாக்க அதே நேரத்தில் கட்டிகள் முழுமையாக அகற்றப்படுவதை இந்த சிகிச்சை செயல்முறைகள் உறுதி செய்திருக்கின்றன.
இது குறித்து, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர் அருண்குமார் கூறியதாவது: “இந்தத் தீங்கற்ற கட்டிகளை அகற்ற, நாங்கள் மிகவும் துல்லியமான அறுவை சிகிச்சை முறைகளைக் கையாண்டோம். ஒரு நோயாளிக்கு, கண் குழியின் தசைக்கூம்பிற்குள் ஆழமாக ‘இன்ட்ராகோனல் டெர்மாய்டு’ கட்டி இருந்தது.
பொதுவாக, டெர்மாய்டு கட்டிகள் தசைக்கூம்பிற்கு வெளியேதான் காணப்படும்; உள்ளே இருப்பது மிகவும் அரிது. இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காவிட்டால், கண்கள் படிப்படியாகப் பிதுங்கிக்கொண்டு பார்வை பாதிக்கப்படும். இது கண் குழியின் தசைக்கூம்பிற்கு வெளியே இருந்து, மூளை மற்றும் மண்டையோட்டின் அடிப்பகுதி வரை பரவி, கண்ணில் ஆழமான அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கட்டியை அகற்ற, ‘லேட்டரல் ஆர்பிட்டோமி’ என்ற சிறப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். இந்த முறை, தசைக்கூம்பிற்கு வெளியே உள்ள கட்டிகளை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் அணுக உதவுகிறது.
இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளுமே மிகவும் சிக்கலானவை. கட்டிகளைப் பாதுகாப்பாக அகற்ற, மண்டையோட்டில் சிறிய துளையிட்டு நாங்கள் மேற்கொண்டோம். சிகிச்சைக்குப் பிறகு, இரு நோயாளிகளின் இயல்பான முகத்தோற்றத்தை மீட்டெடுப்பதற்காக, கண் குழிச் சுவர் சீரமைப்பு சிகிச்சையும் செய்யப்பட்டது. மேலும், ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சையின் துல்லியத்தை அதிகரிக்க எண்டோஸ்கோப் கருவி பயன்படுத்தப்பட்டது.
சிகிச்சையின் முடிவில், இரு நோயாளிகளும் முழுமையாகப் பார்வையைத் திரும்பப் பெற்றுள்ளனர். அவர்களின் முகத்தோற்றம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மிக முக்கியமாக, இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் போது மூளையின் முக்கியப் பகுதிகளுக்கோ திசுக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது எங்களுக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.”
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனயின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் மரு V. பிரவீன் மற்றும் மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் மரு.ஜி. அரிமாணிக்கம் இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.