கோயம்புத்தூர்

“வல்லமை தாராயோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளைத் கருவாக கொண்டு, புற்றுநோய் ஒரு பயங்கரமான நோய் அல்ல என்பதை சமூகத்திற்கு உணர்த்தவும், புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் ஜெம் மருத்துவமனையின் ஒரு பிரிவான ஜெம் கேன்சர் சென்டர் தனது முதல் ரோஸ் தின நிகழ்ச்சியை சனிக்கிழமை அன்று நடத்தியது. இந்த நிகழ்வில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களும், சிகிச்சை முடித்தவர்களும் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கையும், ஊக்கத்தையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு தலைமை தாங்கினார்.

ஜெம் மருத்துவமனைகளின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், திருமதி.ஜெயா பழனிவேலு மற்றும் திருமதி.பிரபா பிரவீன் ராஜ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஜெம் கேன்சர் சென்டரில், 40 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு இலவச மார்பகப் பரிசோதனை (Free mammogram campaign) திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், புற்றுநோயாளிகளுக்கான பிரத்யேக ஆன்கோ-சப்போர்ட் குழுவையும் அவர் துவக்கி வைத்தார்.

ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக பல புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். புற்றுநோயை ஒரு சிகிச்சையளிக்கக்கூடிய நோயாகக் கருத வேண்டுமே தவிர, ஆபத்தானதாக நினைக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அறியாமை என்பது நோயைவிட மோசமானது எனக்கூறி, புற்றுநோய் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மக்கள் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டால், அது சமூகத்தில் புற்றுநோயின் சுமையைக் குறைக்கும் என்றும் கூறினார்.

டாக்டர் பிரவீன் ராஜ் பேசுகையில், புற்றுநோய் என்பது இன்று மற்ற நோய்களைப் போன்றதே என்றார். எந்தவொரு நோயையும் முற்றிய நிலைக்கு விட்டால், அது மரணத்தை ஏற்படுத்த கூடியதாக மாறும். எனவே, மக்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும், உரிய காலத்தில் புற்றுநோய் போன்ற நோய்களுக்கான முன்னெச்சரிக்கை பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும், எந்தவொரு நோய்க்கும் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். இன்று புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முன்னேற்றங்கள் அபாரமாக உள்ளன. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என நம்பிக்கை அளிக்கும்படி பேசினார்.

ஜெம் போன்ற மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்ட பல-நோக்கு சிறப்பு சிகிச்சைகள் (multi modality treatment approach) மூலம் புற்றுநோயை குணப்படுத்துவது மட்டுமல்லாது அந்த புற்றுநோய் செல்கள் உடலில் ரத்தம் மூலமோ அல்லது வேறு வழியிலோ பரவியிருந்தால் அதையும் சரி செய்யமுடியும். இவ்வாறு செய்வதன் மூலம் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் வேறு எங்கும் புற்றுநோய் தோன்றாத வகையில் செய்ய முடியும். இப்படிப்பட்ட நடைமுறைகளை ஒவ்வொரு புற்றுநோய்க்கும் தனித்தனியே திட்டமிடப்பட்டு ஜெம் மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் ஜெம் மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் தடுப்புத் வசதியும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் உலக சுகாதார அமைப்பின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது என்றும், இது எளிமையான பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் அபாயங்களை (அவை இருந்தால்) முன்கூட்டியே கண்டறியும் என்றும் அவர் விளக்கினார். பெரியவர்கள் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வதுபோல, இந்த சோதனையை எடுத்துக்கொண்டு அபாயங்களிலிருந்து விலகி இருக்க முடியும். எனவே ‘சிகிச்சையைவிட தடுப்பு சிறந்தது’ என்ற செய்தியை அனைவரும் உணர்ந்து பரப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ். தனது உரையில், மருந்து மட்டும் ஒருவரை புற்றுநோயிலிருந்து மீட்க உதவாது, தைரியமும் தன்னம்பிக்கையும் அதற்கு மிக அவசியம் என்று கூறினார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நோயாளிகள் அனைவரையும், தைரியமாக சிகிச்சை எடுத்துக்கொண்டதற்காக அவர் பாராட்டினார்.

ஜெம் கேன்சர் சென்டர் இயக்குநர் டாக்டர் பரத் ரங்கராஜன் வரவேற்புரை ஆற்றினார். ரோட்டரியன் மதனா கோபால், நிகழ்வில் தன்னம்பிக்கை உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சிவகுமார் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *