துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் கான்கிரீட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது.
துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பழைய கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022–23 இன் கீழ் ரூபாய் 80 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகளுடன் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அப்பகுதிகளை சேர்ந்த சுமார் 12 மாணவர்கள், 22 மாணவிகள் என மொத்தம் 34 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த வெள்ளி கிழமை மாலை பள்ளி வேலை முடிந்து வழக்கம் போல் பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
திங்கட்கிழமை காலையில் வழக்கம் போல் பள்ளி வகுப்பறையை திறந்து பார்க்கும் பொழுது மாணவர்கள் அமரும் பெஞ்ச் மீது சிமெண்ட் கான்கிரீட் மேற்கூரை பூச்சு விழுந்து கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதற்குள் தகவல் காட்டுத்தீ போல் பரவி அப்பகுதி மக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர்,
பள்ளி கல்வி அதிகாரிகள், வருவாய் துறையினர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளித்தனர்.மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் பழைய கட்டிடத்தில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து இடிந்து விழுந்த மேற்கூரை சிமெண்ட் பூச்சை உடனடியாக சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பள்ளி விடுமுறை நாளில் வகுப்பு அறையின் சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுபோல் மற்ற பள்ளி கட்டிடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்