காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் செயல்பட்டு வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று (15.10.2025) மதியம் தொடங்கி மாலை வரை, கல்லூரி வளாகத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் 105 மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் ஐந்து முன்னோடி விவசாயிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், இணைப் பேராசிரியரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
ஊரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்களது கல்லூரி, சொந்த ஊர் மற்றும் வீட்டை விட்டு, ஒரு கிராமிய சூழலில் 120 நாட்கள் தங்கி, நேரடி அனுபவக் களப்பயிற்சி பெற உள்ளனர்.
அத்தகைய கிராமத் தங்கள் திட்டத்திற்கு முன்னதாக, தொடக்க முன்னுரையாக ஆறு நாள் நோக்குநிலைப் பயிற்சி கடந்த 09.10.2025 அன்று தொடங்கி, நேற்று கல்லூரியில் நிறைவடைந்தது. மாணவர்கள் கிராமங்களுக்கு செல்வதற்கு முன், அங்குள்ள விவசாயிகளை சந்திப்பது எப்படி? வேளாண்மை தொடர்பான சொல்லாடல்களை எவ்வாறு பயன்படுத்துவது? என்பன தொடர்பாக கருத்துப்பகிர்வு செய்யும் வகையில், இக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் சங்கர் நிகழ்ச்சிக்கான அனுமதியை வழங்கினார். இதையடுத்து, இணைப் பேராசிரியர் முனைவர் ஆனந்த்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளராக, கலந்தாய்வை முன்னிலை வகித்து ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சுமார் 1200 பாரம்பரிய நெல் ரகங்களை வயலில் வளர்த்து பராமரித்து வரும் காரைக்கால் மாவட்டம், காஞ்சிபுரம் கொளவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், சுமார் 350க்கும் மேற்பட்ட மூலிகை பயிர்களை சாகுபடி செய்து வரும் அத்திபடுகை கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி, பாரம்பரிய நாட்டு மாடுகள் மற்றும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தலத்தெருவைச் சேர்ந்த இளங்கோ, பஜன்கோவா விவசாயக் கல்லூரியில் முன்பு துணைப் பேராசிரியராக பணியாற்றியதுடன், பின்னர் விவசாயத் துறையில் துணை இயக்குநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மாணவிகள் பூஜாஸ்ரீ, லாவண்யா, சந்தியா, லோகப்பிரியா, தர்ஷிணிதேவி, தமிழழகி, ப்ரசன்னியா, பூமிஹா மற்றும் மாணவர்கள் ஸ்ரீதர், நந்தகுமார், முகில் சந்திரன், சாய்ராம் ஆகியோர், அனைத்து மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் பயன் பெறும் வகையில் கேள்விகள் எழுப்பி, ஆக்கபூர்வமாக விவசாயிகளுடன் விவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் விஜயராகவன் மற்றும் தமிழ்மாறன், நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆவணப்படுத்தி, பிற மாணவர்களுக்கு பயனுள்ளதாக செயல்பட்டனர்.
ஹரெப்ரியா, அலெஸ், தண்டபாணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
முன்னதாக, மாணவி சிவரஞ்சனி அனைவரையும் நிகழ்ச்சிக்கு வரவேற்றார். இறுதியில், தீட்சா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.