மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!-பல லட்சம் ரூபாய் சேதம்; 5 டூ வீலர்களும் தீயில் கருகின!!
மதுரை கீரைத்துறை அருகே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கிய நேரத்தில் ஏ.டி.எம் மையத்தில் முழுவதிலும் பணம் நிரப்பப்பட்ட நிலையில் திடீரென ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது.
சிறிது நேரத்தில் அறை முழுவதும் தீ மளமளவென பரவ தொடங்கி இயந்திரம் எரிந்து சேதமடைந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனுப்பானடி தீயணைப்புத் துறையினருக்கு உடனே தகவல் கொடுத்ததை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏ.டி.எம் அறையிலிருந்த இயந்திரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பல லட்சம் ரூபாயும் கருகியது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த 5 டூவீலர்களும் தீயில் கருகி சேதமடைந்தன. ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.இந்த தீ விபத்து குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.