தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும், உலகில் சமாதானம் நிலவவும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் அருளிய படி தூத்துக்குடியில் உள்ள சக்தி பீடங்களில் அகண்டதீபம் ஏற்றப்பட்டது.
தூத்துக்குடி 3ம் மைல் அருகே உள்ள திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் இயற்கை வழிபாடு மூலம் அகண்டதீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அலங்காரத்தில் அன்னை ஆதிபராசக்தி காட்சியளித்தார்.
இயற்கை சீற்றம் தனியவேண்டியும், அளவான மழை பொழிவு வேண்டியும், உலகில் போர் பதற்றம் நீங்கி சமாதானம் மலரவும் வேண்டி சங்கல்பம் செய்து குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் கருவறையில் உள்ளே அகண்டம் ஏற்றப்பட்டது.
ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் அகண்ட தீபம் ஏற்றினார். தொடர்ந்து திருஷ்டிகள் கழிக்கப்பட்டது. தொடர்ந்து தாமரை சக்கரத்தில் 3 கன்னிப்பெண்கள் கையில் காமாட்சி விளக்கு ஏந்தி நின்றனர். முக்கோண சக்கரத்தில் சிறுவர்கள் 5 பேர் அகல்விளக்கு ஏந்தி நின்றனர்.
அறுங்கோண சக்கரத்தில் 5 சிறுமியர் மாவிளக்கு ஏந்தி நின்றனர். செவ்வக சக்கரத்தில் நடுத்தர வயது சுமங்கலிகள் 5 பேர் சாத்துக்குடி விளக்கு ஏந்தி நின்றனர். எண் கோன சக்கரத்தில் இளவயது சுமங்கலிகள் 5 பேர் ஓம் சக்தி விளக்கு ஏந்தி நின்றனர். வட்ட சக்கரத்தில் மூத்த சுமங்கலி பெண்கள் 5 பேர் ஆப்பிள் விளக்கு ஏந்தி நின்றனர்.
கருவறையில் இருந்து புறப்பட்ட அகண்டம் 1 கன்னிப்பெண், 1 நடுத்தர வயது சுமங்கலி, 1 மூத்த சுமங்கலி ஆகிய 3 பெண்கள் எடுத்து வந்தனர். சீர்வரிசை பொருட்களான நவதானியம், நெல், மஞ்சள்கிழங்கு, வாழைப்பழம் முன் செல்ல அனைத்து சக்கரங்களையும் சுற்றி வந்து மீண்டும் கருவறையில் தென்கிழக்கு மூலையில் நிறுவப்பட்டது.
பொதுமக்கள், பக்தர்கள் 24 மணிநேரமும் அகண்ட தீபத்திற்கு முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தரிசனம் செய்யலாம்.
இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு பண்டக சாலை பொதுமேலாளர் கந்தசாமி, ஆன்மிக இயக்க வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ண நீலா, திருவிக நகர் சக்தி பீட துணைத் தலைவர் திருஞானம், வேள்விக்குழு பத்மா, பொருளாளர் அனிதா, திருச்செந்தூர் மன்ற தலைவர் மாரியப்பன், நாகலாபுரம் விஜயலெட்சுமி, புதுக்கோட்டை காசியம்மாள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் வசந்தி, முத்துலெட்சுமி, செல்வி, அகிலா, வீரலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.