திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட மணவெளித்தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சமுதாய கூடம் கட்டப்பட்டு, அந்த சமுதாய கூடம் மணவெளித்தெரு என செயல்பட்டு வந்தது. தற்போது அந்த சமுதாய கூடத்தை பேரூராட்சி மன்றத்தின் மூலம் அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் 2024-25 மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு மற்றும் மேம்படுத்துதல் மூலம் புனரமைப்பு செய்து உள்ளனர்.
இந்த சமுதாய கூடத்தில் பெயர் பலகையில் மணவெளித்தெரு என்பதை நீக்கி விட்டு வெட்டியாரத்தெரு என எழுதப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் மணவெளித்தெரு என எழத வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த செய்தி சமூக வளைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ விடம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற ஆர்.காமராஜ் எம் எல் ஏ பொதுமக்களின் வலியுறுத்தலின் பேரில் சாதியை குறிப்பிட்டு எழதப்பட்டிருந்ததை தார்பூசி அழித்தார். மேலும் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு உடனடியாக மணவெளித்தெரு சமுதாய கூடம் என்ற பெயரிலேயே எழதப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்தார். மேலும் பேரூராட்சி செயல் அலுவலரையும் தொடர்புக் கொண்டு பேசினார். சமுதாய கூடத்தில் சாதி பெயரில் எழதப்பட்டிருந்ததை தார்பூசி அழித்த ஆர். காமராஜ் எம் எல் ஏ வை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டினர்.
நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் குமாரமங்கலம் கே.சங்கர்,யூ.இளவரசன், நகரச் செயலாளர் சா.குணசேகரன்,மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவருமான மாஸ்டர் எஸ். ஜெயபால், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, ஆர்.ஜி.பாலா, அப்பகுதி நிர்வாகி எஸ்.ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.