ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன் கோவில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக அடைக்கலம் காத்த அம்மனுக்கு பால், பன்னீர், திரவிய பொடி,
தயிர், சந்தனம், இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள்
அம்மனை தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். பின்னர் நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் வானவேடிக்கை,தப்பாட்டம் உறுமி மேளம் இசை வாத்தியங்களுடன் முளைப்பாரிகளை பெண்கள் தலையில் சுமந்து பசும்பொன் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். பின்னர் கோட்டைமேடு செல்லும் புறவழி சாலையோரத்தில் அமைந்துள்ள அடைக்கலம் காத்த அம்மன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் அடைக்கலம் காத்த அம்மன் ஆலயத்தை சுற்றி வலம் வந்து அதன் பின்னர் கோவில் முன்பாக முளைப்பாரியை கீழே இறக்கி வைத்து கும்மியடித்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஆற்றில் முளைப்பாரிகளை கரைத்தனர்.இந்த ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.