கர்நாடகாவிலிருந்து அஸ்கா சர்க்கரை ஏற்றி வந்த கனரக லாரி பர்கூர் மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இரவு முழுவதும் அந்தியூர் பர்கூர் வழியாக கர்நாடகா செல்ல போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ரூ 15 லட்சம் மதிப்புடைய அஸ்கா சர்க்கரை எரிந்து நாசமானது.
கர்நாடக மாநிலம், மைசூர் அடுத்த பண்டாரபுராவில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து, 35 டன் அஸ்கா சர்க்கரை பாரம் ஏற்றிக் கொண்டு, தஞ்சாவூர் செல்வதற்காக, 16 சக்கர லாரி ஒன்று, ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதை வழியாக நேற்று வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநிலம், கொல்லேகாலை சேர்ந்த டிரைவர் சையது யாகூப்(37) லாரியை ஓட்டி வந்தார்.
இவருடன், அதே பகுதியை சேர்ந்த கிளீனர் சானவல்லாவும்(46) உடன் வந்தார்.
நேற்று இரவு 7:15 மணிக்கு, தாமரைக்கரை அடுத்த முதல் கொண்டை ஊசி வளைவில் லாரி வந்து கொண்டிருந்தபோது, திடீரென என்ஜினில் ‘ஷார்ட் ஷர்க்யூட்’ ஆகி, தீப்பிடித்து எரிய துவங்கியது.
அதிர்ச்சியடைந்த இருவரும், உடனடியாக லாரியை நிறுத்தி கீழே இறங்கி, லாரியில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால், லாரியின் முன்பக்கத்தில் பற்றி எரிந்த தீ ‘மளமள’ வென பரவியது.
இதைக் கண்ட அவ்வழியே பயணித்தவர்கள், அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கும், பர்கூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மலைப்பகுதி என்பதால், அந்தியூர் தீயணைப்பு நிலைய வாகனம் செல்ல அரை மணி நேரத்துக்கும் மேலானது. அதற்குள், ஒட்டு மொத்த லாரியும் பற்றி எரிய துவங்கியது.
சம்பவ இடத்துக்கு சென்ற அந்தியூர், பவானி தீயணைப்பு வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்த தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும், மலைப்பகுதியின் மரங்களில் தீ பரவாமல் இருக்க, மரங்கள், செடிகள், கொடிகள் மீதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
அரை மணி நேரத்துக்கும் மேல் போராடிய வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், லாரி முற்றிலும் தீக்கிரையாகி எலும்பு கூடு போல காட்சியளித்தது.லாரியின் இருந்த மூட்டைகள் தீயின் வெப்பத்தில் உருகி, சர்க்கரை பாகு ரோட்டில் ஓடியது.
இதன் காரணமாக, கர்நாடகத்திலிருந்தும், பர்கூரிலிருந்து அந்தியூர் நோக்கி வந்த வாகனங்கள், தாமரைக்கரையில் நிறுத்தப்பட்டன.
இதேபோல், அந்தியூரிலிருந்து பர்கூர் செல்லவும், கர்நாடகா செல்லவும் வந்த வாகனங்கள் அனைத்தும், வரட்டுப்பள்ளம் செக் போஸ்ட்டில் நிறுத்தப்பட்டது. லாரியிருந்து சர்க்கரை பாகு ரோட்டில் வழிந்து ஓடியதில், ஆங்காங்கே திட்டு திட்டாக காட்சியளிக்கிறது.
சர்க்கரை ‘பாகை’ அகற்றிய பின்னரே, வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக, நேற்று இரவு, 8:00 மணியிலிருந்து மலைப் பகுதியில் எந்த வாகனங்களும் இயக்கப்படாமல் பாதிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு, மலைப்பகுதியில் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் சிக்கிக் கொண்டவர்கள் நள்ளிரவு 12 மணி வரை நின்று இருந்தனர் அதன் பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
இந்த தீ விபத்தில் ரூ 15 லட்சம் மதிப்புடைய அஸ்கா சர்க்கரை எரிந்து நாசமானது.