திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா, அஞ்சல் அட்டை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிதிருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார்.
நிறுவனர் நாசர், துணைத் தலைவர் காசிநாத்,பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா அஞ்சல் அட்டை குறித்து பேசுகையில்,அஞ்சலட்டை என்பது தகவல்களை எழுதி, உறை எதுவும் இல்லாமலேயே சேரவேண்டியவருக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான செவ்வக வடிவத்தில் வெளியிடப்படும் தடித்த தாள் அல்லது மெல்லிய அட்டை ஆகும்.
இதை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான அஞ்சல் கட்டணம், உறையில் இட்டு அனுப்பும் கடிதங்களுக்கு ஆகும் கட்டணத்தை விடக் குறைவு. சில அஞ்சல் அட்டைகளில் அஞ்சல் கட்டணம் செலுத்தப்பட்டதைக் குறிக்கும் அஞ்சல்தலை போன்ற வடிவம் அச்சிடப்பட்டிருக்கும். சில அட்டைகளில் இது இருக்காது.
அனுப்புபவர் தனியாக அதற்குரிய அஞ்சல்தலையைத் தனியாக வாங்கி ஒட்டவேண்டும். கட்டணம் அச்சிடப்படாத அட்டைகளைத் தனியார் நிறுவனங்களோ, பிற அமைப்புக்களோ, தனியாட்களோகூட அச்சடித்துக்கொள்ள முடியும். ஆனால், அஞ்சல் கட்டணத்தோடு கூடிய அட்டைகளை அதிகாரம் அளிக்கப்பட்ட அஞ்சல்சேவை அமைப்புக்களே வெளியிடுகின்றன.
அவ்வகையில் இந்திய அஞ்சல் துறை மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவிற்காக, அவரது உருவப்படம் மற்றும் சுழலும் சக்கரம் போன்ற படங்களைக் கொண்ட அஞ்சல் அட்டை தொகுப்புகளை வெளியிட்டது . மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா, அஞ்சல் அட்டைகளில் காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூர்பா காந்தியின் உருவப்படங்கள்,சுழலும் ராட்டை சக்கரம் (சர்க்கா) போன்ற சின்னங்களும், தண்டி யாத்திரைபோன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன .
இந்தியாவின் சுதந்திரத்திற்கான அவரது பங்களிப்புகளையும், அமைதி மற்றும் அகிம்சைக்கான உலகளாவிய மரபையும் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன்,சிவக்குமார், இளம்வழுதி, அருள்மொழி தேவன், முத்துராம் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்