பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (17.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் ரூ.372.00 லட்சம் மதிப்பீட்டில் 12 பேருந்துகள் நிறுத்தும் வகையிலான பேருந்து நிறுத்தங்களும், 14 கடைகளும், கழிவறை வசதிகளுடன் ஒரு உணவகம் கட்டும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த தினசரி காய்கனி சந்தைக்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.248 லட்சம் மதிப்பீட்டில் 115 கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கட்டங்களை தரமாக கட்டி, உரிய காலத்திற்குள் பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையினை தீடீராய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மருத்துவமனையின் பின் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கும், நகராட்சி பொறியாளருக்கும் அறிவுறுத்தினார்.
பின்னர், வடக்கு மாதவி சாலையில் உள்ள பூங்கா நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி ஒவ்வொரு தெரு வாரியாக பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, நகராட்சி பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் சரவணன், பெரம்பலூர் வட்டாட்சியர் திரு.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.